நான் பிறந்தபோது " நான் " பிறக்கவில்லை
மூன்று மாதத்தில் முகங்கள் தெரிந்தும்
புரிந்துகொள்ளும் நிலையில் இல்லை
போகப்போக சிறிது சிறிதாய்
உடலில் பட்டால் உணரும் சக்தியும்
மூக்கைக் கொண்டு முகரும் சக்தியும்
பரிவோடு யாரோ தொடுகின்ற போது
புரிந்துகொண்டு புன்னகை செய்து
பசிக்கின்ற போது கால்களை உதைத்து
கத்திக் கதவடைத்து கதறி அழுதால்
அம்மா அல்லது யாரோ ஒருவர்
ஓடிவந்து மடிமேல் கிடத்தி
கொஞ்சிக்குலவி அமுது படைப்பர்
என்று மட்டும் உணரும் மனது
பிறந்து மலர்ந்து, பின்எனக்கு
உணர்ச்சி பிறந்து ஓசை அறியும்
செவிகளும் செயல்படும் விந்தை அறிந்தேன்.
பிறந்த மனதிற்கு உடன்பிறப்பாக
மாயை பிறந்து மெதுவாக வளர்ந்தது.
மாயை பிறந்ததால் சிந்தனை பிறந்தது
சிந்தனையால் வரும் எண்ணங்கள் பிறக்க,
நீ, நீங்கள், அது, அவை, அவர்கள் என்று
பல நூறுஉருவங்கள் தோன்றி மறைய,நான் என்ற எண்ணம் எனக்குள் பிறந்தது.
தான் என்ற உணர்வு தானாக வந்ததால்
என்னையும் என்னைநீக்கி என்முன் காணும்
ஏனைய அனைத்தையும் பிரித்துப் பார்க்கும்
புத்தி வளர் ந்தது, அறிவு முதிர்ந்தது.
அதன் விளைவாக, வந்து சேர்ந்தது,
நான் மட்டும், எனக்கு மட்டும் என்கின்ற
தன்னுரிமை கேட்கும் தனி உலகம் ஒன்று.
அது எனக்குள் பிறந்து, எனக்குள் வசிக்கவும்,
அகந்தை என்ற அசுரன் வந்தான் - தன்
முகத்தின் அழகை கண்டு ரசித்தான் - என்
அகத்தின் அழகை மூடி மறைத்தான்.
காலம் சென்றது - கடமைகள் வந்தன.
வெற்றியில் விளைந்த ஆணவத்தை
தோல்விகள் வந்து துவளச் செய்தது.
இடர்களும் இன்பமும் தொடர்நாடகமாய்
அலைகளிலாடி அலைப்புறும் படகுபோல்
வாழ்க்கைக் கடலில் நீந்தும் எனக்கு
உதவுகின்ற துடுப்பினைப் போல
அனுபவம் வந்து தெளிவு பிறந்து,
அறுபது வயதைக் கடந்து வந்தேன்.
நான்
பொழுது போதாது என்று புலம்பியது
முற்காலம்.
பொழுது போகாது திண்டாடுவது
தற்காலம்.
எனது அதிர்ஷ்டம்
வந்தது ஒரு பொற்காலம்.
அதுதான் கம்யுட்ட ர் காலம்.
இது,
கடவுள் தந்த வரப் பிரசாதம்,
பொழுதைப் போக்க ஒரு புதிய சாதனம்..
எனக்கு நானே பேசி எழுதி
அடித்துத் திருத்தி திருத்திஅடித்து
திரும்பவும் மறுபடி திருப்பி எழுத
சொந்தமாய் எனக்கோர்
இணைய தளம்.
ஆர்வத்துடன் நான் ஆரம்பித்தது
கற்பனையில் தோன்றிய கவிதை வரிகள்.
இதுவரை வந்த தலைப்புகளான
" இல்லை " , " புதிர் பாட்டு " , " புதிருக்கு விடை ",
என்ற மூன்றுடன் முற்றுப் புள்ளி வைத்து,
இனி என்ன எழுதலாம் என யோசிப்பதற்கு
இடை வேளை விடுகிறேன்.
விட மாட்டேன் - திரும்ப வருவேன்.
பிறகு சந்திப்போம்
அன்புள்ள,
கோபால்.