Thursday, November 11, 2010

எதுகையும் மோனையும்




தமிழ் மொழியின் அழகு எதுகையிலும் மோனையிலும் தெரியும்.
இவை பாடுகின்ற பாட்டினிற்கு ஓசை இனிமையை கொடுக்கிறது.
பாமரர்கள்கூட, " என்ன எகனை மொகனையா பேசுரவே" என்பார்கள்.
எதுகை மோனை என்றால் என்ன ?

தமிழில் "எதுகை" என்பது, ஆங்கிலத்தில் ரைம் ( Rhyme ) என்று சொல்லலாம்.
தமிழ்ச் செய்யுளின் இயல்பு,  ஒவ்வொறு அடியின் ஆரம்பத்தில் அமையும் எதுகை.

கவிதை வரிகள் என்று பொதுவாகச் சொன்னாலும், வரி வேறு, அடி என்பது வேறு.
ஒரே அடியானது பல முறை மடக்கி மடக்கி,  நீளமாக பல வரிகளில் வரலாம்.

அப்படியானால், எப்படி, எது பாட்டின் அடி, என்று தெரிந்து கொள்வது?
அதற்கு, ' எதுகை' உதவுகிறது. -
இரண்டு எதுகைகளுக்கு இடையில் இருப்பது பாட்டின் ஒரு அடி.

அது சரி. -  எது எதுகை என்பதை எப்படித் தெரிந்து கொள்வது?
அதற்கும் ஒரு வழி இருக்கிறது.

" இரண்டாம் எழுத்து ஒன்றுவது எதுகை " என்பது இலக்கண விதி.
இரண்டாம் எழுத்துக்குப் பின் சில எழுத்துக்கள் ஒரே மாதிரி இருந்தால் ஓசை நயம் கூடும்.
கந்தன் திருவடி
நந்தந் தலைமிசை
வந்தன் புடனுறின்
பந்தங் கழியுமே

இதில் இரண்டாம் எழுத்தும் மூன்றாம் எழுத்தும்,
அதாவது " ந்த" என்பது ஒவ்வொரு அடியிலும் வருகிறது.
இந்தப் பாட்டில் ஒவ்வொரு வரியும் ஒவ்வொரு அடி.

இதுமாதிரி, கண்ணன்..வண்ணன்..திண்ணன்..அண்ணன் என்பதில்,
2,3 & 4வது எழுத்துக்களான "ண்ணன்" என்பது மூன்றெழுத்து எதுகை. அதே சமயம்,
முதல் எழுத்துப் பற்றியும் ஒரு விஷயத்தை முக்கியமாகக் கவனிக்க வேண்டும்.

பட்டு என்பதற்கு, பாட்டு என்பது எதுகை ஆகாது.
பட்டு, கட்டு, குட்டு, பிட்டு என்ற குறில் வார்த்தைகள் ஒன்றுக்கொன்று எதுகை.
அதே போல,
பாட்டு, காட்டு, நீட்டு, ஊட்டு போன்ற நெடில்.வார்த்தைகள் ஒன்றுக்கொன்று எதுகை. குறில் என்பது ஒசையினால் சிறிது குறுகிய குட்டெழுத்து.
குறிலை நீட்டினால் சிறிது நீண்ட ஒசை வரும்போது, அது நெட்டெழுத்து.

மற்றொரு உதாரணம்,
வரிகள் நான்கில், அடிகள் இரண்டு உள்ள ஒரு பாட்டு.

பாம்பினைக் கண்ட போது
பயத்தினால் நடுங்கும் பேதை
கம்பினை எடுப்பா னோசொல்
கடுகியே ஓடு வானே.                      

( கடுகியே என்றால் வேகமாக என்று அர்த்தம்.)

"பாம்பினை"  என்ற வார்த்தை முதல் அடியின் ஆரம்பம். -
"கம்பினை" என்ற வார்த்தை இரண்டாவது அடியின் ஆரம்பம்.
ஆதலால், இந்த நான்கு வரிப் பாடலில் இருப்பது இரண்டு அடிகள் மட்டுமே.
அதில், " ம்பினை " என்பது எதுகை என்றாலும்,  'பா' வுக்கு 'க' எதுகை ஆகாது.

முதல் அடியில் முதல் எழுத்தில் உள்ள " பா " என்ற நெடிலும்,
இரண்டாவது அடியில் முதல் எழுத்தில் உள்ள " க " என்ற குறிலும்
ஒன்றுக்கொன்று எதுகை ஆகாது என்பதால்,
இப்பாட்டில் வரும் பாம்பு - கம்பு என்பதற்கு பதிலாக,
பாம்பு - காம்பு என்று மாற்றி அமைத்தால்
"பாம்பினை" என்ற வார்த்தைக்கு நெடில் எதுகையாக "காம்பினை" என்று வரும்.
( காம்பு என்ற சொல்லுக்கு மூங்கில் என்றும் அர்த்தம் உண்டு. )

காம்பினை எடுப்பா னோசொல்
கடுகியே ஓடு வானே.
  
இப்போது,
ஓசை நயம், ஓசை அமைதி மாறாமல் இருக்கும்.  - அர்த்தமும் மாறாது.

"முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை "  என்பது யாப்பிலக்கண வாய்ப்பாடு.
மோனை  என்ற வார்த்தைக்கு முன்னிடம் என்பது பொருள்.
தமிழில் மோனை என்பது ஆங்கிலத்தில் ' அல்லிடரேஷன் '  ( Alliteration )
வட மொழியில், அதை ' பிராசம் ' என்றும் சொல்வார்கள்.
தமிழ் செய்யுட்களில் ஒவ்வொரு அடியிலும் மோனை வருவது பாட்டுக்கு அழகு தரும்.

தமிழ் வசனங்க்களில் மோனை அமைந்தால் அதை, " அடுக்கு மொழி " என்போம்.

உயிர் எழுத்துக்கள் பன்னிரண்டில், அவை நாலு நாலாகப் பிரிந்து,
மோனை எழுத்துக்களாக இணையும்.
...............அ ; ஆ ; ஐ ; ஒள ......................இ ; ஈ ; எ ; ஏ ....................உ ; ஊ ; ஒ ; ஓ...........
இது போல,
அகரத்துடன் சேர்ந்த மெய் எழுத்துக்களான க் ; ச் ; ம் ; வ்...  ஒரு மோனைக் கூட்டம் -
க ; கா ; கை ; கௌ ./ ச ; சா ; சை ; செள../ ..த ; தா ; தை ; தெள./ ..ம ; மா ; மை மெள.

இந்தப் பொது விதிகளுடன், சில சிறப்பு விதிகளும் உண்டு.
அதன்படி, " ச " வுக்கு " த " மோனை என்பதால்,
ச ..சா...சை ..செள..த ..தா ..தை ...தெள எல்லாமே ஒன்றுக்கொன்று மோனை.
அதேபோல்,  " ம " வுக்கு " வ " மோனை, ....... " ஞ " வுக்கு " ந  " மோனை.
ஆதலால், .ம - மா - மை - மௌ - வ - வா - வை - வௌ .......என்பதும்  ..
...ஞ - ஞா - ஞை - ஞெள - ந - நா - நை - நெள .....என்பதும்,  ஒன்றுக்கொன்று மோனை.

மேலும் மற்றவைகள், சீர் ; அசை ; தளை ; தொடை ; அடி ...போன்றவை..

2 comments:

  1. நன்றி.
    மோனை - எடுத்துக்காட்டுக்கள் தர முடியுமா தயவு செய்து.
    பாபு

    ReplyDelete
  2. நன்றி.நல்ல விளக்கம் தரப்பட்டுள்ளது. மிகவும் தெளிவாக இருந்தது.

    ReplyDelete